தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தனியார் நிர்வாகத்துக்கு ஒப்படைக்கக் கோரி, ஹிந்து சமய அறநிலையத் துறை (HR&CE) சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தகுதி அடிப்படையில் நேரடியாக விசாரிக்க முடிவு செய்துள்ளது.

கோவையைச் சேர்ந்த ஆன்மிகத் துறவி சுவாமி தயானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை, நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கு முன், 2025 ஏப்ரல் 1 அன்று, அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெறலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சமீபத்திய விசாரணையில், மூன்று மாநிலங்களிலும் உள்ள அறநிலையத் துறை சட்டங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான விவகாரங்களையும் விதிகளையும் கையாளுகின்றன; எனவே வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வராமல் இருக்க உச்சநீதிமன்றமே முழுமையாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வாதிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, முந்தைய உத்தரவை அமர்வு திரும்பப் பெற்றது. முதன்மை ரிட் மனுக்கள் அனைத்தும் மீண்டும் பட்டியலிடப்பட்டு, உச்சநீதிமன்றத்தாலேயே நேரடியாக விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழக HR&CE சட்டத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளை எதிர்த்து புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவற்றையும் முதன்மை வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சாய் தீபக் கோரினார். அனைத்து தொடர்புடைய மனுக்களிலும் விரிவான விசாரணை நடத்தப்படும் என அமர்வு கூறி, வழக்கை ஜூலை 24க்கு ஒத்திவைத்தது.