காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை வெற்றிகரமாக ஏறிய தங்களின் சொந்த உலகச் சாதனைகளை மீண்டும் முறியடித்து, நேபாளத்தைச் சேர்ந்த இரு ஷெர்பா மலையேறும் வழிகாட்டிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

கடல் மட்டத்திலிருந்து 29,031 அடி உயரத்தில், இமயமலையில் நேபாளம்–திபெத் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்ட் உலகின் மிக உயர்ந்த சிகரம். கடும் உறைபனி, அதிவேக ஆபத்தான காற்று மற்றும் உச்சியில் ஆக்சிஜன் குறைவு போன்றவை ஏற்றத்தை மிகப் பெரிய சவாலாக்குகின்றன.

“எவரெஸ்ட் மனி” என அழைக்கப்படும் காமி ரீட்டா ஷெர்பா, 32-வது முறையாக உச்சியை வெற்றிகரமாக அடைந்துள்ளார். 1994-ல் வணிக ரீதியிலான பயணத்தின் போது முதன்முறையாக உச்சியைத் தொட்ட அவர், அதன் பின்னர் ஆண்டுதோறும் சர்வதேச மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டியாகச் சென்று பல முறை சிகரத்தை அடைந்துள்ளார்; சில ஆண்டுகளில் ஒரே சீசனில் இருமுறையும் ஏறியுள்ளார்.

“மலையின் ராணி” என குறிப்பிடப்படும் லக்பா ஷெர்பா, 11-வது முறையாக உச்சியைத் தொட்டு பெண்களுக்கான தன் சாதனையை மேலும் வலுப்படுத்தியுள்ளார். 2000-ம் ஆண்டில் எவரெஸ்டை வென்று பாதுகாப்பாக தரையிறங்கிய முதல் நேபாளப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.