தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, மே 19 அன்று கோவை, திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மே 20 மற்றும் மே 21 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 19 முதல் மே 25 வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மே 19 முதல் மே 22 வரை மணிக்கு 45–55 கி.மீ வேகத்தில், இடையிடையே 65 கி.மீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும். இந்த நாட்களில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.