பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துஷார் குமார் (23), மேயராக தேர்வு செய்யப்பட்டு கிழக்கு பிரிட்டனில் உள்ள எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹம்வுட் நகரத்தின் மேயராக பொறுப்பேற்றுள்ளார்.
இதன் மூலம், பிரிட்டனில் மிக இளைய இந்திய வம்சாவளி மேயர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துஷார் குமார் 20 வயதில் தொழிலாளர் கட்சியின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்; பின்னர் 2023ஆம் ஆண்டு எல்ஸ்ட்ரீ–போர்ஹம்வுட் நகர சபையில் இணைந்து துணை மேயராகவும் பணியாற்றினார்.
கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட காலத்தில், அவர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் துறையில் இளங்கலை படிப்பின் இரண்டாம் ஆண்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு கவுன்சிலர் பதவியிலிருந்து துணை மேயராகவும், தற்போது நகர சபையின் உயரிய மேயர் பதவிக்கும் உயர்ந்துள்ளார்.
பொறுப்பேற்ற பின் வெளியிட்ட அறிக்கையில், மேயராக பதவியேற்பது தன் வாழ்க்கையின் மிகப் பெரிய கவுரவம் என்றும், தன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் தனது குடும்பத்திற்கு அரசியல் பின்னணி இல்லை என்றும் கூறிய அவர், ரிஷி சுனக்கைப் போல எதிர்காலத்தில் பிரிட்டன் பிரதமராக வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.
துஷார் குமார் 10 வயது வரை ஹரியானாவின் ரோஹ்தக்கில் வாழ்ந்ததாகவும், பின்னர் பெற்றோர் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தாயார் பர்வீன் ராணி ஹெர்ட்ஸ்மியர் போரோ கவுன்சிலில் பணியாற்றி வருவதுடன், துணை மேயராகவும் இருந்துள்ளார்.





