வாஷிங்டன், இந்தியாவின் அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஹோவிட்சர் பீரங்கிகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த ரூ.4,122 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப ஆதரவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவலின்படி, அபாச்சி ஹெலிகாப்டர்களின் பராமரிப்புக்கான முக்கிய ஒப்பந்ததாரர்களாக போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்கள் செயல்படும். ஹோவிட்சர் பீரங்கிகளுக்கான பராமரிப்பில் பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனம் முதன்மை ஒப்பந்ததாரராக இருக்கும்.
அபாச்சி ஹெலிகாப்டர்களுக்காக இன்ஜினியரிங், தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவு சேவைகள், தொழில்நுட்ப தரவுகள், பணியாளர்களுக்கான பயிற்சி ஆகியவை இந்தத் திட்டத்தில் இடம்பெறுகின்றன.
ஹோவிட்சர் பீரங்கிகளுக்காக உதிரி பாகங்கள், பழுதுபார்ப்பு சேவைகள், பயிற்சி, தொழில்நுட்ப உதவி, கள சேவை பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தளவாட ஆதரவுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடு இந்தியாவுடன் ராணுவ உறவை வலுப்படுத்தவும், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை ஆதரிக்கவும் முக்கியமானதாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





