ராணுவத்தின் போர் தயார் நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவிடமிருந்து ‘ஏ.எச்-64இ அப்பாச்சி’ போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் ‘எம்777ஏ2’ பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள், பராமரிப்பு மற்றும் நீண்டகால ஆதரவு சேவைகளை பெற இந்தியா இரண்டு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. இவ்விரு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.4,100 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அனுமதி வழங்கிய விவரங்களின்படி, அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கான நீண்டகால பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளுக்கு ரூ.1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எம்777 பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்புக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி, உதிரி பாகங்கள் வழங்கல், பழுது பார்ப்பு மற்றும் பயிற்சி சேவைகள் இடம்பெறும். அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் 30 மி.மீ. துப்பாக்கி, ஏவுகணைகள், ராக்கெட்டுகள், நீண்ட தூர ரேடார் மற்றும் இரவு நேர செயல்பாட்டுக்கு உதவும் சென்சார்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை.
எம்777 பீரங்கிகள் எடை குறைவாக இருப்பதால் போர்க்களத்திற்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும்; 20 முதல் 40 கி.மீ. வரை குண்டுகளை வீசும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க அறிக்கையின்படி, அப்பாச்சி தொடர்பான ஒப்பந்தத்தை போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்கள் செயல்படுத்தும்; எம்777 தொடர்பான உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை பி.ஏ.இ. சிஸ்டம்ஸ் நிறுவனம் வழங்கும்.
இந்த விற்பனை தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் என்றும், புதிய தளவாடங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவு மூலம் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி தரும் திறன் மேம்படும் என்றும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.





