புதுடில்லி: நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்காமல் இருப்பதாக முடிவு செய்துள்ளனர்.

மேற்காசிய போர் காரணமாக உலகளாவிய வினியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இறக்குமதி செலவுகள் உயர்ந்து வருகின்றன. அன்னிய செலாவணியில் குறிப்பிடத்தக்க பகுதி தங்க இறக்குமதிக்கே செல்கிறது என்பதால், தங்க வாங்குதலைக் குறைக்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் அதிகரித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பெட்ரோல்–டீசல் நுகர்வைக் குறைத்தல், மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரித்தல், வீட்டிலிருந்தே பணியாற்றுதல் போன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமரின் கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அதிகாரிகள் ஓராண்டு தங்கம் வாங்குவதில்லை என தீர்மானித்தனர்.

மேலும், சுழற்சி முறையில் 20% ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி, அதிகாரிகள் ஒரே வாகனத்தில் பயணம் செய்ய ஊக்குவித்தல், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துதல் ஆகிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.