பீஜிங்: சீனா, சுமார் 100 தொழிலாளர்களை கொண்டு ஐந்தே நாளில் 26 மாடி கட்டடத்தை கட்டி முடித்ததாக வெளியாகிய தகவல் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இதே அளவிலான உயர்கட்டடங்களுக்கு ஆண்டுகள் ஆகும் நிலையில், சீனாவின் ‘பிராட் குரூப் ஹோலன்’ நிறுவனம் அதிவேக கட்டுமான முறையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் ‘பிரீ-பேப்ரிகேட்டட்’ எனப்படும் முன்தயாரிப்பு முறையை பயன்படுத்தியுள்ளனர். சுவர்கள், தூண்கள், அறை பகுதிகள், கழிப்பறை மாட்யூல்கள் உள்ளிட்ட கூறுகள் அனைத்தும் ‘பி-கோர்’ என குறிப்பிடப்படும் சிறப்பு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருளில் தொழிற்சாலையிலேயே முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவற்றை பெரிய கிரேன்கள் மூலம் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ‘நட்-போல்ட்’ மூலம் துல்லியமாக இணைத்து கட்டடத்தை அமைத்துள்ளனர்; இதில் கான்கிரீட் பயன்படுத்தப்படவில்லை. ‘ஜிங்டு ஹோலன் பில்டிங்’ என பெயரிடப்பட்ட இந்த கட்டடம் சுமார் 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 208 குடியிருப்புகளுடன் உள்ளது; 4 அடுக்கு கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் சோபா, கட்டில் போன்ற பர்னிச்சர்களும் முன்பே பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உறுதித்தன்மை குறித்து எழுந்த கேள்விகளுக்கு, இது பாரம்பரிய சிமென்ட் கட்டடங்களை விட சுமார் 10 மடங்கு எடை குறைவானது என்றும், கடுமையான நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.





