சென்னை: தமிழக முதல்வர் விஜய், தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை தொடர்ந்து சந்தித்து உரையாடி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் தொடர்பான பிரதிநிதிகள் குழு முதல்வரை சந்தித்தது. மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் ஸ்மிதா சதாசிவம், தண்டுவட பாதிப்படைந்தோர் சங்க நிறுவனர் ஞானபாரதி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிம்மசந்திரன், ஐ.ஐ.டி. சென்னை அணுகல்தன்மை ஆய்வு மையத்தின் முதன்மை ஆய்வாளர் ஹேமசந்திரன் கரா, மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகநீதி இயக்கத் தலைவர் சரவணன், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தகுமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
சந்திப்பின்போது முதல்வர் தன் இருக்கையிலிருந்து எழுந்து, எதிர் வரிசையில் அமர்ந்திருந்தவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாற்றுத் திறனாளிகள் துறையில் உள்ள அதிகாரிகள் குறித்து பல்வேறு புகார்களை குழுவினர் முதல்வரிடம் எடுத்துரைத்தனர். அவற்றை முதல்வர் கவனமாக கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்த சந்திப்பை சிம்மசந்திரன் தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். முதல்வர் அறைக்குள் நடந்த உரையாடல் காட்சிகள் வெளியானது அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.





