எஸ்.பி.ஐ. வங்கியில் நடந்ததாக கூறப்படும் கடன் மோசடி தொடர்பாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எட்டு இடங்களில் அமலாக்கத் துறை (ஈ.டி.) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை அண்ணாநகரை தலைமையிடமாகக் கொண்ட தனியார் ஸ்டீல் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உற்பத்தி நிலையம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் 2008 முதல் 2014 வரை பல தவணைகளில் எஸ்.பி.ஐ.யில் இருந்து மொத்தம் ரூ.109 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
கடன் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், கடன் பெற சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை வங்கி நிர்வாகம் ஆய்வு செய்தபோது பல ஆவணங்கள் போலி என தெரிய வந்ததாகவும், இதையடுத்து 2020ல் வங்கி புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர்கள் வடிவாம்பாள், சீனிவாசன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
விசாரணையில், வங்கியில் பெற்ற கடன் தொகை சட்டவிரோத முறையில் வெளிநாடுகளில் உள்ள துணை நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வட்டியுடன் சேர்த்து வங்கிக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஈ.டி. தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, அண்ணாநகர் 2வது அவென்யூவில் உள்ள நிறுவன அலுவலகம், அண்ணாநகர் மேற்கில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் லட்சு மணசுவாமி ஆகியோரின் வீடுகள், மேலும் அயனாவரத்தில் பைனான்சியர் குல்நாஸ் பேகம் வீட்டிலும் சோதனை நடந்தது. பல டிஜிட்டல் ஆதாரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





