பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
செய்தி விவரப்படி, தமிழக அரசு மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றான காவல் நிலையத்தில் கையெழுத்திடுதல் உள்ளிட்டவற்றை பின்பற்றவில்லை என்றும், மீண்டும் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆந்திராவில் இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குண்டர் சட்ட வழக்குகளை ஆய்வு செய்யும் ஆலோசனைக்குழு இந்த வழக்கையும் பரிசீலித்து, கைது தொடர்பான ஆவணங்கள் மற்றும் காரணங்களை ஆய்வு செய்ததுடன், சங்கரிடம் நேரடியாக விசாரணையும் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில், குண்டர் சட்டம் பாய்ச்சுவதற்கு போதுமான காரணங்கள் இல்லை என குழு ஒருமனதாக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த குண்டர் சட்ட கைது நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக உள்துறை துணைச் செயலாளர் குமாரி வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் சங்கர் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.





