பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்தியா–இத்தாலி உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் இந்த உறவு வேகமாக விரிவடைந்து, சுதந்திரம், ஜனநாயகம் போன்ற பகிரப்பட்ட மாண்புகளையும் எதிர்காலத்திற்கான பொதுப் பார்வையையும் அடிப்படையாகக் கொண்ட உத்திசார் கூட்டாண்மையாக மாறிவருகிறது என அவர்கள் கூறினர்.
இணைந்து எழுதிய கட்டுரையில், உலக அமைப்புமுறை ஆழமான மாற்றங்களை சந்திக்கும் சூழலில், பொருளாதார ஆற்றல், சமூக படைப்பாற்றல் மற்றும் நாகரிக அனுபவம் ஆகியவற்றை இணைக்கும் புதிய பரிமாணத்தை இந்த கூட்டாண்மை பெறுகிறது என்று குறிப்பிட்டனர். இருதரப்பு உறவை மேலும் ஆழப்படுத்தவும் பல்வகைப்படுத்தவும், பரஸ்பர ஆற்றல்களை ஒருங்கிணைக்கவும் இருநாடுகளும் உறுதியாக உள்ளன என்றனர்.
புத்தாக்கம் மற்றும் தொழில்துறையில், இத்தாலியின் வடிவமைப்பு–உற்பத்தி திறன் மற்றும் உலகத் தர சூப்பர் கம்ப்யூட்டிங் திறன்கள், இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரம், பொறியியல் திறமை மற்றும் பெரிய புத்தொழில் சூழலியலுடன் இணைந்து வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இருதிசைகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை உயர்த்தும் வாய்ப்பை உருவாக்கும் என்றும் தெரிவித்தனர்.
பாதுகாப்பு மற்றும் விண்வெளி, துாய்மையான தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், மருந்துகள், ஜவுளி, வேளாண்-உணவு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, 2029-க்குள் ₹2.25 லட்சம் கோடி அளவிலான இருதரப்பு வர்த்தக இலக்கை எட்டி அதை மிஞ்ச விருப்பம் உள்ளதாகவும் கூறினர்.
மேலும், இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) என்பது நவீன போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் வலையமைப்புகள், எரிசக்தி அமைப்புகள் மற்றும் மீள்திறன் கொண்ட விநியோகத் தொடர்கள் மூலம் பிராந்தியங்களை இணைக்கும் தொலைநோக்கு முயற்சி என அவர்கள் விளக்கினர். இதை நனவாக்க இந்தியாவும் இத்தாலியும் பிற கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படும் என்றும், ‘தர்மம்’, ‘வசுதைவ குடும்பகம்’ போன்ற இந்தியக் கருத்துகளும் இத்தாலியின் மனிதநேய பாரம்பரியமும் மக்கள் மையமான வலுவான கூட்டாண்மைக்கு அடித்தளமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.





