நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகள் பதிவிட்டதாக கூறி, டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு டில்லி உயர் நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடையது. கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பதக் உள்ளிட்டோர் மீது விசாரணை நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ., டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா அமர்வில் பட்டியலிடப்பட்டது.

மேல்முறையீட்டை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகக் கூறி கெஜ்ரிவால் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். இதன் பின்னர் நீதிபதி குறித்து அவதூறு பரப்பும் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மே 14 அன்று சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா விலகி, அதை வேறு அமர்வுக்கு மாற்றினார். தொடர்ந்து, தன்னை குறிவைத்து அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டதாகக் கூறி அவர் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடங்கினார்.

இந்த மனு நீதிபதிகள் நவீன் சாவ்லா, ரவீந்தர் துதேஜா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவால், சிசோடியா, சஞ்சய் சிங், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நான்கு வாரங்களில் விளக்கம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில், அடுத்த விசாரணை ஆகஸ்ட் 4க்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அவமதிப்பு நடவடிக்கைக்கு காரணமாக குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் நகல்களை பாதுகாத்து வைக்க நீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவு வழங்கப்பட்டது.