பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு இமெயில் மூலம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம்; வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்று முதலில் நிறுவனம் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், பணிநீக்கம் செய்யப்பட்டதை இமெயில் மூலம் அறிவித்ததாகவும், சிங்கப்பூரில் பணியாற்றிய சிலருக்கு அதிகாலை 4 மணியளவில் அறிவிப்பு சென்றதாகவும் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி, பெரும் முதலீடுகளை மேற்கொள்வதால் செலவுக் குறைப்புக்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடப்பதாக இந்த செய்தி குறிப்பிடுகிறது. மெட்டா நிறுவனம் இந்த ஆண்டு ஏஐ துறையில் 125–145 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பணிநீக்கத்துடன் சேர்த்து, 7,000 ஊழியர்களை ஏஐ சார்ந்த பணிகளுக்கு மாற்றியதாகவும், 6,000 காலி பணியிடங்களை நிரந்தரமாக நீக்கியதாகவும் தகவல். இதில் பொறியியல் மற்றும் விற்பனை பிரிவுகள் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே பணிநீக்கம் குறித்த அச்சம் ஊழியர்களிடையே இருந்ததாகவும், அதனால் அலுவலகத்தில் வழங்கப்படும் இலவச சிற்றுண்டிகள் மற்றும் லேப்டாப் சார்ஜர்களை சிலர் எடுத்துச் சென்றதாகவும் செய்தி கூறுகிறது. மேலும், கீபோர்டு மற்றும் மவுஸ் செயல்பாடுகளை கண்காணிக்கும் புதிய மென்பொருளை லேப்டாப்புகளில் நிறுவியதாகவும், இதற்கு எதிராக ஊழியர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.