தமிழகத்தில் அறநிலையத் துறை (HR&CE) கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் நடைமுறையில் உள்ள கட்டண “சிறப்பு தரிசனம்” முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி. சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனுவில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதாக கூறி ரூ.500 வரை வசூலித்து சிறப்பு தரிசனம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில்களில் பணம் வசூலித்து சிறப்பு தரிசனம் செய்ய எந்த சட்டப் பிரிவுகளும் அனுமதி அளிக்கவில்லை என்றும், 1967-க்கு பிறகு இந்த நடைமுறை அமலுக்கு வந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண முறையால் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது என்றும், பணத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்குவது பாரபட்சம் எனவும் மனுதாரர் வாதிட்டுள்ளார். அதே நேரத்தில், முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணியர், புதுமண தம்பதியர், பால் குடம் அல்லது காவடி எடுப்பவர்கள் உள்ளிட்டோருக்கும், கவர்னர், முதல்வர், மடாதிபதிகள், ஜீயர்கள், உபயதாரர்கள் போன்றோருக்கும் இலவச சிறப்பு தரிசனத்தை அனுமதிக்கலாம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

பணத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி, கோவில்களில் கட்டண சிறப்பு தரிசன முறையை ரத்து செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.