பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்புக்குப் பின்னர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனாவுக்கு மேற்கொண்டுள்ள இரண்டு நாள் அரசு முறை பயணம் உலக அரசியலில் முக்கிய நகர்வாகக் கவனிக்கப்படுகிறது.
இந்தப் பயணத்தில் இரு நாட்டு தலைவர்களும் வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு, ஈரான், உக்ரைன் போர் மற்றும் ‘பன்முக உலக ஒழுங்கு’ தொடர்பான கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் டிரம்ப் சீனாவுக்கு சென்று பல சர்வதேச பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், உறுதியான ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை.
மேலும், சீனா–ரஷ்யா இடையேயான ‘நல்லுறவு மற்றும் நட்பு ரீதியிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ உருவானதன் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தப் பயணம் நடைபெறுகிறது. இதன் போது இரு நாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணத்திற்கு முன் வெளியிட்ட வீடியோவில், சீனா–ரஷ்யா உறவுகள் மேலும் ஆழமடைவது உலக அரங்கில் ஸ்திரப்படுத்தும் சக்தியாக இருக்கும் என புடின் தெரிவித்தார். உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இரு நாடுகளின் உறவுகள் கணிசமாக வலுப்பெற்றுள்ள நிலையில், 2020 முதல் 2024 வரை இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பானதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.





