தென்கொரியா பயணத்தில் இருக்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அணு ஆயுத மிரட்டலுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்தார். “இன்றைய இந்தியா மாறிவிட்டது; எந்தவிதமான அச்சுறுத்தலையும் பொறுத்துக்கொள்ளாது” என்று அவர் தெரிவித்தார்.
சியோலில் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஆன் கியூ பேக்கை சந்தித்த பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா தனது இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், இந்தியா இனி கடந்த கால இந்தியா அல்ல என்றும் கூறினார்.
அதே நேரத்தில், செமிகண்டக்டர் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் சிப்கள் சந்தையில் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக கூறிய அவர், Semicon India 2025 மாநாட்டில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட “விக்ரம்” 32-பிட் சிப் செயலி பிரதமருக்கு வழங்கப்பட்டதையும் நினைவூட்டினார்.
உள்நாட்டு அரசியல் குறித்து பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக செயல்படுவது தொடர்வதாகவும், அதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார். இதுவரை அரசின் மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் யாராலும் சுமத்த முடியவில்லை என தெரிவித்த அவர், 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும், வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாட்டை பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுப்பதை காட்டுகின்றன; அதைத் தடுத்து நிறுத்த உலகில் எந்த சக்திக்கும் இயலாது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் வெற்றிகள் என்பது மக்கள் நம்பிக்கையின் அடையாளம் என்றும், அந்தக் கோணத்தில் பிரதமர் மோடி நீண்ட காலமாக நாட்டின் தலைவராக தொடர்வது அந்த நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.





