சென்னை: தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகே 500 மீட்டருக்குள் செயல்பட்ட டாஸ்மாக் சில்லரை மதுக்கடைகளில் இதுவரை 513 கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மாநிலம் முழுவதும் சில்லரை கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்கிறது. பொதுநலன் கருதி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டருக்குள் உள்ள 717 கடைகளை இரண்டு வாரங்களில் மூடுமாறு முதல்வர் விஜய் மே 12 அன்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, மூடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை வரை 513 கடைகள் மூடப்பட்டுள்ளன.

மீதமுள்ள கடைகளையும் இந்த வார இறுதிக்குள் மூடி, அரசுக்கு அறிக்கை அளிக்க டாஸ்மாக் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.