தவெக தலைமையிலான அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்களை சேர்க்க வாய்ப்பில்லை என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையில் இடம்பெறுமாறு ஆதவ் விடுத்த அழைப்புக்கு நன்றி தெரிவிப்பது தமது கடமை என்றார். மே 8 மாலை 6 மணிக்கு ஆன்லைனில் கூடிய கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் இரவு 9 மணியளவில் நிறைவடைந்ததாகவும், அதில் பலர் அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாகவும் கூறினார்.

ஆட்சி அமைப்பதற்காக மட்டுமே நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதாக அவர் விளக்கினார். பதவியேற்புக்குப் பிறகு வேளச்சேரியில் விஜய் தனது விருப்பத்தை தெரிவித்ததாகவும், அதையே இப்போது ஆதவ் வெளிப்படையாக மீண்டும் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசிக தவெக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை; திமுக கூட்டணியில் இருந்து இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார். தவெக ஆட்சி அமைக்க இரண்டு இடங்கள் மட்டுமே தேவைப்பட்டதால் ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் லீக், விசிக போன்ற கட்சிகள் அரசில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை தவெக தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.