மருத்துவமனைகளில் நடந்ததாக கூறப்படும் கிட்னி திருட்டு தொடர்பாக மீண்டும் விரிவான விசாரணை நடத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நெசவு கூலி தொழிலாளர்கள் இலக்காகி கிட்னி திருடப்பட்டதாக வெளியான தகவல்கள் கடந்த ஆண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், கைது நடவடிக்கைகள் நடந்தபோதும் முக்கிய அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், விசாரணையை மீண்டும் தொடங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் காலத்தில் இந்த விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.