புதுடில்லி: வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாக வெளியான கருத்துக்கு எதிராக உருவான ‘காக்ரோச் ஜண்டா பார்ட்டி’ என்ற நையாண்டி அரசியல் இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அந்த கருத்தில், வேலை இல்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சி’ என்றும் சமூகத்தின் ‘ஒட்டுண்ணி’ என்றும் விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இளைஞர்கள், சமூக வலைதளங்களில் இயக்கமாக ஒன்றிணைந்தனர்.

மே 16-ஆம் தேதி அபிஜீத் டிப்கே என்பவர் இந்த இயக்கத்தை சமூக வலைதளப் பக்கமாக தொடங்கியதாக கூறப்படுகிறது. தொடங்கிய குறுகிய காலத்திலேயே இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து, பின்தொடர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த நிலையில், சுமார் ஒன்றரை கோடி பின்தொடர்வோர் இருந்ததாக கூறப்படும் அந்த சமூக வலைதளப் பக்கம் முடக்கப்பட்டதாகவும், இதனால் இளைஞர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ‘Cockroach Is Back’ என்ற பெயரில் புதிய பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அதை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.