புதுடில்லி: தற்போது நடைமுறையில் உள்ள ‘இ 20’ (20% எத்தனால்) பெட்ரோலைத் தாண்டி, பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேலும் உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு புதிய எரிபொருள் தர நிர்ணயங்களை வெளியிட்டுள்ளது.

அறிவிப்பின்படி, எதிர்காலத்தில் நாடு முழுதும் படிப்படியாக ‘இ 22, இ 25, இ 27, இ 30’ என அதிக கலப்பு பெட்ரோலை அறிமுகப்படுத்த ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக எத்தனால் கலப்பு வரம்புகள், ஆக்டேன் மதிப்பீடு தொடர்பான தேவைகள், எரிபொருள் நிலைத்தன்மை அளவுகோல்கள் மற்றும் கலவை தர அளவுகள் உள்ளிட்ட அம்சங்கள் புதிய தர நிர்ணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதல்கள் வாகன மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள், எரிபொருள் வினியோக நிறுவனங்கள் ஆகியோர் மாற்றத்துக்குத் தயாராக உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘இ 20’ பெட்ரோல் தான் தேசிய எரிபொருள் தர நிர்ணயமாக உள்ளது; அதற்கேற்பவே இன்றைய வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

20% ஐ மீறும் எத்தனால் கலப்பு பெட்ரோலில் தற்போதைய வாகனங்கள் நம்பகமாக இயங்குமா என்பது குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், புதிய தர நிர்ணயங்களுக்கு ஏற்ப சோதனை செய்து தேவையான மேம்பாடுகளை செய்ய உற்பத்தியாளர்களுக்கு கால அவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது. உள்நாட்டு எத்தனால் உற்பத்திக்கு ஆதரவு அளிப்பதோடு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் முயற்சியாகவும் இதை நிபுணர்கள் பார்க்கின்றனர்.