ரோம் நகரில் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியா–இத்தாலி உறவை அடுத்த கட்டமான ‘சிறப்பு கூட்டாண்மை’ நிலைக்கு உயர்த்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்த பேச்சில் வர்த்தகம், பாதுகாப்பு, பசுமை எரிசக்தி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), முக்கிய தாதுக்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
ஐந்து நாடுகள் அரசு முறைப் பயணத்தின் இறுதி கட்டமாக இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு ரோம் நகரில் பாரம்பரிய ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டாரெல்லாவை சந்தித்து, இருதரப்பு நட்புறவு, வர்த்தகம், முதலீடு மற்றும் கலாசார தொடர்புகள் குறித்து விவாதித்தார்.
பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமர் மெலோனி, பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்தார். பின்னர் இரு தலைவர்களும் ரோமின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொலோசியம் அரங்கையும் பார்வையிட்டனர். செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது, இந்தியா–இத்தாலி இடையே விரிவான நட்புறவை உருவாக்குவது குறித்து பேசினோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சமீப ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.1.35 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும், 2029க்குள் ஆண்டுக்கு ரூ.1.90 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இத்தாலி திகழ்கிறது.





