நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக நீடிக்கும் நிலையில், மே 19 அன்று இந்தியாவின் மின் தேவை 260.45 ஜிகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி, விசிறி, ஏர் கூலர் போன்ற சாதனங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்ததே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் கூறினர். இதற்கு முந்தைய நாள் மே 18 அன்று மின் நுகர்வு 257.37 ஜிகா வாட் என்ற சாதனையை எட்டியிருந்த நிலையில், அடுத்த நாளே அது முறியடிக்கப்பட்டது.

இந்த உச்ச தேவை, சூரிய மின்சாரம் அதிகம் கிடைக்கும் பகல் நேரங்களிலேயே பதிவானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மின்வெட்டு அல்லது மின் துண்டிப்பு போன்ற பெரிய இடையூறுகள் இல்லாமல், தேசிய மின் வினியோக அமைப்பு நிகழ்நேர ஒருங்கிணைப்பின் மூலம் தேவையை சமாளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

அனல் மின் நிலையங்களை மட்டும் சாராமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காற்றாலை, நீர்மின் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஒருங்கிணைத்து துல்லியமான மேலாண்மையுடன் வினியோகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கோடையில் உச்ச தேவை 271 ஜிகா வாட் வரை செல்லலாம் என மத்திய மின்சார அமைச்சகம் முன்பே கணித்திருந்ததாகவும், அதற்கேற்ப தேசிய, மாநில, மண்டல மின் வினியோக மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

உச்ச தேவை பதிவான நாளில் அனல் மின்சாரம் சுமார் 67% (1,74,565 மெகா வாட்) பங்களித்தது. நீர்மின் (11,422 மெகா வாட்), காற்றாலை (4,897 மெகா வாட்), அணுமின் (6,293 மெகா வாட்), எரிவாயு (5,205 மெகா வாட்) மற்றும் சூரிய மின்சாரம் (56,204 மெகா வாட்) ஆகியவை கூடுதலாக வழங்கப்பட்டன; இதில் சூரிய மின்சாரம் மொத்த தேவையில் சுமார் 21% ஆக இருந்தது.