ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் எல்லை தாண்டிய வன்முறையால் பெருமளவு குடிமக்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தது.

ஆயுத மோதல்களில் குடிமக்களை பாதுகாப்பது என்ற விவாதத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தர தூதர் ஹரிஸ் பார்வததேனி, இனப்படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய “களங்கப்பட்ட நீண்ட வரலாறு” பாகிஸ்தானுக்கு இருப்பதாகவும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களைத் தேர்ந்தெடுத்து பேசுவது முரண்பாடானது என்றும் கூறினார்.

ஐநா அமைப்பு ஆய்வுக் குறிப்புகளை மேற்கோள் காட்டி, 2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை தாண்டிய நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானில் 750 குடிமக்கள் உயிரிழந்ததாகவும், பெரும்பாலான உயிரிழப்புகள் வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் குடிமக்கள் உயிரிழப்புக்கு காரணமான 95 சம்பவங்களில் 94 சம்பவங்கள் பாகிஸ்தானால் நிகழ்ந்ததாக ஐநா ஆவணங்கள் குறிப்பிடுவதாக அவர் கூறினார். ரமலான் மாதத்தில் மார்ச் மாதத்தில் மருத்துவமனை மீது நடந்த வான்வழித் தாக்குதலை நினைவூட்டி, எந்த வகையிலும் ராணுவ இலக்காக நியாயப்படுத்த முடியாத அந்த தாக்குதலில் 269 பேர் உயிரிழந்து 122 பேர் காயமடைந்ததாக தெரிவித்தார்.

சர்வதேச சட்டங்களை போற்றுவதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்களை குறிவைப்பது பாசாங்குத்தனமானது என்றும், தொழுகை முடித்து மசூதியிலிருந்து திரும்பியவர்கள்மீதும் தாக்குதல் நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். பாகிஸ்தான் தன் சொந்த மக்கள்மீதும் குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தும் நாடு எனவும் அவர் விமர்சித்தார்.