கேரளாவில் திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தேசியப் பாடல் ‘வந்தே மாதரம்’ பாடப்பட்ட விதம் தொடர்பாக அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது.
மே 18 அன்று வி.டி. சதீசன் முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து காங்கிரஸ், ஐ.யு.எம்.எல். உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். விழாவில் ‘வந்தே மாதரம்’, தேசிய கீதம் மற்றும் மலையாள மொழிப் பாடலும் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ பாடலின் அனைத்து சரணங்களும் பாடப்பட்டதாக கூறப்படுவது தான் விவாதத்தின் மையமாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது ரியாஸ், அதிகாரப்பூர்வமாக முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் நிலையில் முழு வடிவம் ஏன் பாடப்பட்டது என கேள்வி எழுப்பினார். மேலும், முதல் இரண்டு சரணங்களைத் தாண்டிய பகுதிகள் வரலாற்று ரீதியாக சர்ச்சைக்குரியவை என்றும், இப்பாடலை கட்டாயப்படுத்தும் முயற்சிகள் அரசியலமைப்பு சுதந்திரம் மற்றும் மதச்சார்பின்மை குறித்த விவாதங்களைத் தூண்டும் என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், அரசியல் காரணங்களுக்காக இடதுசாரிகள் தேசியப் பாடலை அவமதிப்பதாக குற்றம்சாட்டினார். ‘வந்தே மாதரம்’ முழுமையாக பாடப்பட்டதில் தவறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்துக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும், பதவியேற்பு விழாவை கவர்னர் மாளிகை ஏற்பாடு செய்ததாகவும் காங்கிரஸ் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.





