‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆய்வு செய்யும் பாராளுமன்ற கூட்டுக்குழு, லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தினால் நாட்டுக்கு பெரிய அளவில் சேமிப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

கூட்டுக்குழு தலைவர் மற்றும் பா.ஜ.க. லோக்சபா எம்.பி. பி.பி.சவுத்ரி, ஒரே நேரத் தேர்தல்கள் நடத்தப்பட்டால் சுமார் ரூ.7 லட்சம் கோடி வரை மிச்சப்படுத்த முடியும் என்றும், இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.6% அளவில் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இந்த திட்டத்தை முன்னெடுக்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ள நிலையில், தொடர்புடைய மசோதா 2024 டிசம்பரில் லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே அந்த மசோதா தற்போது கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பி.பி.சவுத்ரி தலைமையிலான 41 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக்குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் காந்திநகரில் மாநில தலைமைச் செயலர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதையடுத்து, குஜராத் அரசு விரிவான அறிக்கை தயாரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக சவுத்ரி தெரிவித்தார்; அது பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறினார். சேமிக்கப்படும் தொகையை உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தலாம் என்றும், நாட்டின் நலனுக்காக அரசியலைத் தாண்டி உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.