இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பீஜிங்கில் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு முக்கியமானதாக குறிப்பிடப்பட்டது.

உறவை மேலும் வலுப்படுத்தவும் நல்லுறவை மேம்படுத்தவும் நடந்த பேச்சுகளின் நிறைவில், வர்த்தகம், உட்கட்டமைப்பு, ஊடகம், சினிமா, அறிவியல் ஆராய்ச்சி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் மொத்தம் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அவற்றில் முக்கியமானதாக, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில், இருதரப்பு வர்த்தகத்தை அமெரிக்க டாலருக்கு பதிலாக சீன யுவான் மற்றும் ரஷ்ய ரூபிள் கரன்சிகளில் மேற்கொள்ளும் வகையில் நிதி உள்கட்டமைப்பு ஒப்பந்தம் இடம்பெற்றது.

மேலும், வர்த்தக கட்டமைப்பின் கீழ் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்துதல், எரிபொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல முக்கிய நகரங்களுக்கு இடையே நிலையான வர்த்தக வழித்தடங்களை உருவாக்குதல், ஏகபோக ஆதிக்கத்தைத் தடுத்து நியாயமான வர்த்தக நடைமுறைகளை உருவாக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய அம்சங்களும் ஒப்பந்தங்களில் இடம் பெற்றன.

எரிசக்தித் துறையில், ரஷ்யாவின் அரசு நிறுவனம் ‘ரொசாட்டம்’ சீன அணுமின் நிலையங்களில் புதிய மின் உற்பத்தி அலகுகளை கட்டமைத்து முடிப்பதற்கான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது.