ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவுக்காக லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், சார் பதிவாளர் மற்றும் ஒரு இடைத்தரகரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வெளிப்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளர் ராமநாதனை, ராமநாதபுரம் நகரப் பகுதியில் உள்ள ஒரு சொத்தைப் பதிவு செய்ய ஒருவர் அணுகியதாக கூறப்படுகிறது. அந்தப் பதிவை செய்து முடிக்க ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வழங்க விரும்பாத அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, இடைத்தரகர் அயூப் கான் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முதல் தவணையாக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கூடுதலாக ரூ.3 லட்சம் பெறப்பட்ட போது, சார் பதிவாளர் ராமநாதன் மற்றும் இடைத்தரகர் அயூப் கான் ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.