அரசுகள் அமைக்கும் சட்ட குழுக்கள் மற்றும் அரசு சட்ட அதிகாரி பதவிகளில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அல்லது பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவில், மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
லாட்லி பவுண்டேஷன் அறக்கட்டளை தாக்கல் செய்த இந்த மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் சட்ட குழுக்கள், சட்ட உதவி குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளிலும் பெண்களுக்கு அதே அளவிலான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது. அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருமான விகாஷ் சிங், உயர்நிலை நீதித்துறை மற்றும் சட்ட நியமனங்களில் பெண்கள் போதிய அளவில் இடம்பெறவில்லை என வாதிட்டார்.
1989-ல் பாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 11 பெண்கள் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், உச்ச நீதிமன்றத்தில் பெண்கள் நீதிபதிகள் 5.88% மட்டுமே, உயர் நீதிமன்றங்களில் 13.76% மட்டுமே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலாக ஒரு பெண் கூட நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
வாதங்களை தொடர்ந்து, மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.





