மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி நீதிமன்ற முன்அனுமதி இன்றி வெளிநாடு செல்லக் கூடாது என கோல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அபிஷேக் பானர்ஜி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 31 வரை அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மேற்கு வங்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், நீதிமன்ற அனுமதி இன்றி நாட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை என்றும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. எப்ஐஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை தேவை எனக் குறிப்பிட்டு, விசாரணையைத் தொடரவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.