தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அ.தி.மு.க. அதிருப்தி அணியினரை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து திடீர் எதிர்ப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க. அதிருப்தி அணியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் கூறியதாவது: தேர்தல் முடிவுகள் வெளியானபோது பெரும்பான்மை இல்லாததால் ஆதரவு கோரி த.வெ.க. தரப்பில் அழைப்பு வந்ததாகவும், ஆனால் முதல்வர் பதவியை எடப்பாடி கே. பழனிசாமி கேட்டதால் கூட்டணி அமைக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
பின்னர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, ஆதரவு அளித்தால் ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்ற புரிதல் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால் த.வெ.க. வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட சிலருக்கு அ.தி.மு.க. தரப்புக்கு அமைச்சரவையில் இடம் வழங்க விருப்பமில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஊழல் வழக்குகள் உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது, எட்டு பேருக்கு பதிலாக நான்கு பேருக்கு மட்டுமே இடம் போன்ற முன்மொழிவுகள் பேசப்பட்டதாகவும், அதிருப்தி அணி அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதற்கிடையில், வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. அதிருப்தி அணியை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், த.வெ.க. தரப்பு சட்ட சிக்கல்கள் மற்றும் எம்.எல்.ஏ. பதவி நிலைத்தன்மை குறித்து கவலை தெரிவிப்பதாகவும், மறுபுறம் வி.சி.க., முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்க பேச்சு நடப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த எதிர்ப்பை முன்னிறுத்தி தங்களை வெளியேற்ற முயற்சி நடப்பதாகவும் அதிருப்தி அணியினர் குற்றம்சாட்டினர்.




