சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறுகிறது.
கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, காலை 10.00 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 18 பேர் அமைச்சர்களாக சேர்க்கப்படலாம் என்றாலும், எண்ணிக்கை 18 முதல் 23 வரை இருக்க வாய்ப்பு உள்ளது.
சமீபத்திய சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டது. மே 10-ம் தேதி முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வி.சி.க. மற்றும் முஸ்லிம் லீக் சார்பில் தலா ஒருவர் அமைச்சராக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க. தரப்பில் சென்னை ஆர்.கே.நகர் மரியவில்சன், தூத்துக்குடி ஸ்ரீநாத், ஈரோடு கிழக்கு பாலாஜி விஜய், திருச்சி ஸ்ரீரங்கம் ரமேஷ், தாம்பரம் சரத்குமார், கிணத்துக்கடவு விக்னேஷ், கோவை வடக்கு சம்பத், அறந்தாங்கி பர்வேஷ், காஞ்சிபுரம் ரஞ்சித்குமார், கடலூர் ராஜ்குமார் உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் இடம்பெறும் நிலை உருவாகிறது.





