தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 40,000 ஏரி மற்றும் குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக எடுத்துச் செல்ல முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நீர்நிலைகள் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளவை. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், விவசாய தேவைகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் பயன்பாடு மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகத்திற்காக வண்டல் மண் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஏரி, குளங்களின் கொள்ளளவு அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர். திட்ட செயல்பாடு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த், நிதி அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, தகுதியான ஏரி, குளங்களின் பட்டியலை மாவட்ட அளவிலான அரசிதழில் வெளியிட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய அலுவலர்களின் மேற்பார்வையில் உரிமக் கட்டணம் செலுத்தாமல் வண்டல் மண்ணை எடுத்துச் செல்லலாம் என அரசு தெரிவித்தது. பயனாளர்கள் tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் தாசில்தார்கள் அனுமதி வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.