முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். த.வெ.க.க்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்துள்ளது.
வி.சி.க. தரப்பில், திருமாவளவனைத் தவிர வேறு யாரையும் அமைச்சராக்க கட்சி நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை என்றும், வேறு ஒருவர் அமைச்சரானால் உள்ளக அதிருப்தி உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், திருமாவளவனை அமைச்சரவையில் சேர்த்து முக்கிய துறையையும் வழங்க த.வெ.க. முன்வந்துள்ளதாகவும், திருச்சி கிழக்கில் அவர் போட்டியிட த.வெ.க. ஆதரவு அளிக்கும் என்றும் தகவல் தெரிவிக்கிறது.
மேலும், இடைத்தேர்தலில் தி.மு.க. ஆதரவும் கிடைக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் வி.சி.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது. அ.தி.மு.க. தரப்பிலும் ஆதரவு கோர முயற்சி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திருமாவளவன் சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகும் பட்சத்தில், அவர் சிதம்பரம் லோக்சபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என கூறப்படுகிறது. அப்போது நடைபெறும் சிதம்பரம் இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியிட்டு, வி.சி.க. ஆதரவு அளிக்கும் வாய்ப்பால், த.வெ.க.க்கு முதல் எம்.பி. பதவி கிடைக்கலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.




