கொல்கட்டா: வரும் மே 28-ஆம் தேதி நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மதகுருக்கள் மற்றும் இமாம்கள் பசு பலி செய்யவும் மாட்டிறைச்சி பகிரவும் வேண்டாம் என சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தியாக திருநாளான பக்ரீத்தில் வழக்கமாக விலங்குகளை பலியிட்டு இறைச்சியை தானமாக வழங்குவது நடைமுறையாக உள்ளது. இதற்கிடையில், மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்ற பின்னணியிலும் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கொல்கட்டா நஹோடா மசூதி இமாம் மவுலானா சபிக் காஸ்மி, பக்ரீத்தின் போது முஸ்லிம்கள் பசுக்களை பலியிட வேண்டாம் என்றும், மாட்டிறைச்சி உண்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், பசுவை பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பசு பலியை தவிர்ப்பதால், பசுக்களை வளர்த்து விற்பனை செய்யும் ஹிந்து சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்றும், இதில் பெரிய அளவில் பண பரிமாற்றம் நடைபெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதே கருத்தை மாநிலத்தின் பிரபலமான புர்புரா ஷெரிப்பை சேர்ந்த பிர்சடா ஜியாவுதின் சித்திக் தெரிவித்தார். ஹிந்துக்கள் பசுவை தெய்வமாக வணங்குவதால், அதற்கு பதிலாக வெள்ளாடு மற்றும் செம்மறியாடு இறைச்சியை பயன்படுத்தலாம் என அவர் கூறினார்.

இதற்கு முன், மே 13-ஆம் தேதி மேற்கு வங்க உள்துறை அமைச்சகம், மேற்கு வங்க விலங்கு வதைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1950-ல் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி, பலியிடப்படும் பசு 14 வயதுக்கு மேல் இருப்பதை உறுதி செய்ய பஞ்சாயத்து அல்லது மாநகராட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு கால்நடை மருத்துவரிடமிருந்து எழுத்துப்பூர்வ சான்று பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.