பாரிஸில் உள்ள பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம், 2009ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் 288 பேர் உயிரிழந்த வழக்கில் ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.720 கோடிக்கும் அதிகமான அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. விபத்துக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரியோ டி ஜெனீரோவில் இருந்து பாரிஸ் நோக்கி சென்ற ஏர்பஸ் ஏ330 விமானம் விபத்துக்குள்ளானதில் 288 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் வேகத்தை அளவிடும் சென்சார்கள் பனி படிந்து பழுதடைந்ததே விபத்துக்குக் காரணம் என இரு நிறுவனங்களும் விளக்கம் அளித்திருந்தன.

இந்த வழக்கில் 2023ம் ஆண்டு கீழ் நீதிமன்றம் இரு நிறுவனங்களுக்கும் சாதகமாக தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றம், ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக தீர்ப்பளித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யத் தவறியது மற்றும் விமானிகளுக்கான பயிற்சியில் இருந்த குறைபாடுகளே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணங்கள் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2.51 கோடி என மொத்தம் ரூ.720 கோடிக்கும் அதிகமான தொகையை அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரான்ஸின் உயர்மட்ட நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளன.