புதுடில்லியில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஒவ்வொருவரையும் கண்டறிந்து வெளியேற்றப்படும் என தெரிவித்தார்.
செயற்கையாக மக்கள்தொகை அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தும் நோக்கில் சட்டவிரோத அகதி ஊடுருவல் நடைபெறுகிறது என அவர் குற்றம்சாட்டினார். இதனைத் தடுக்கும் நடவடிக்கையாக, சட்டவிரோதமாக குடியேறியவர்களைத் தேடி கண்டுபிடித்து நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என்றார்.
எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், இந்தியாவின் சர்வதேச எல்லையில் சுமார் 6,000 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் என அமித்ஷா கூறினார். மேலும் ‘ஸ்மார்ட் எல்லை’ திட்டத்தின் கீழ் அடுத்தாண்டுக்குள் பிஎஸ்எஃப்புக்கு டிரோன், ரேடார், திறன்வாய்ந்த கேமராக்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சட்டவிரோத ஊடுருவல் மற்றும் கால்நடை கடத்தலைத் தடுக்க போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பிஎஸ்எப் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஒரு பிரச்னையை கட்டுப்படுத்துவது மட்டும் போதாது; அதை வேரோடு அழிப்பதே உண்மையான அணுகுமுறை என கூறி, ஊடுருவலைத் தடுக்க பிஎஸ்எப் அதையே பின்பற்ற வேண்டும் என்றார்.





