புதுடில்லி: அழகு சிகிச்சைகளில் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகள்/தயாரிப்புகள் ‘அழகு சாதனப் பொருட்கள்’ என்ற வரையறைக்குள் வராது; அவற்றை அழகு கலை நிபுணர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அழகு மையங்கள் மற்றும் சில கிளினிக்குகளில், ‘அழகு சிகிச்சை’ என்ற பெயரில் ஊசி மூலம் செய்யப்படும் அழகு சார்ந்த செயல்முறைகள் அதிகரித்து வருகின்றன. சமூக வலைதள விளம்பரங்களும் இத்தகைய சேவைகள் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தவறான விளம்பரங்கள் மற்றும் அங்கீகாரமற்ற நடைமுறைகளை கட்டுப்படுத்தவும் வெளியிடப்பட்ட உத்தரவில், உடலை அழகுபடுத்த, துாய்மைப்படுத்த, கவர்ச்சியை மேம்படுத்த அல்லது தோற்றத்தை மாற்ற, உடலின் மீது தேய்க்க/ஊற்ற/தூவ/தெளிக்க பயன்படும் பொருட்களே ‘அழகு சாதனங்கள்’ என விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஊசி வடிவில் வழங்கப்படும் தயாரிப்புகள் இந்த வரையறைக்குள் வராது. எந்தவொரு தயாரிப்பையும் ‘அழகு சாதனம்’ என்ற பெயரில் ஊசி மூலம் பயன்படுத்த அழகு மையங்கள் அல்லது தனிநபர்களுக்கு அனுமதி இல்லை; மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விதிமீறல்கள் அல்லது தவறான நடைமுறைகள் குறித்து பொதுமக்கள் மின்னஞ்சல் மூலம் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடமோ அல்லது மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரிகளிடமோ புகார் அளிக்கலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





