ஆமதாபாத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில் குஜராத்திடம் சென்னை அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த முடிவால் சென்னை அணியின் பிளே ஆப் கனவும் முடிவுக்கு வந்தது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்காக கேப்டன் கில், சாய் சுதர்சன் தொடக்கத்தில் அதிரடியாக ஆடி 125 ரன்கள் கூட்டணி அமைத்தனர். 23 பந்துகளில் அரைசதம் கடந்த கில் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பட்லரும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

சாய் சுதர்சனும், பட்லரும் அரைசதம் அடித்தனர். சாய் சுதர்சன் 84 ரன்களில் ஆட்டமிழந்தார்; பட்லர் 27 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன், அன்சூல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

230 ரன் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு முதல் பந்திலேயே சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் சென்னை அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக துபே 47 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியால் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் தொடர்கிறது. சென்னை அணி 14 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் லீக் கட்டத்திலேயே பிளே ஆப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.