தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக, முதல்வர் விஜய் அடுத்த வாரம் டில்லி செல்ல உள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்றதும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை டில்லியில் சந்திப்பது வழக்கமான மரபாகக் கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இந்த பயணத்திற்கான ஏற்பாடுகள் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கியுள்ளதாக தகவல். விஜய் பிரதமர், மத்திய நிதியமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்திற்கான நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய கோரிக்கை மனுக்கள் மற்றும் பிரதிநிதித்துவங்களை தயாரிக்கும் பணிகளை அதிகாரிகளுடன் ஆலோசித்து மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

அதேபோல் இடதுசாரி கட்சிகளின் டில்லி அலுவலகங்களுக்கு சென்று மா.கம்யூ. பொதுச்செயலர் எம்.ஏ. பேபி, இ.கம்யூ. மூத்த தலைவர் டி.ராஜா ஆகியோருக்கு நேரில் நன்றி தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் திருவள்ளூவர் சிலையை திறந்து வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக செய்தி கூறுகிறது.