மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக, அறநிலையத் துறை (HR&CE) செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 15 அன்று அமைச்சர் நிர்மல்குமார் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். வழக்கமாக மதியம் 12:45 மணிக்கு நடை சாத்தப்படும் நிலையில், அமைச்சரின் வருகைக்காக நடை திறந்தே வைத்திருந்ததாகவும், அவரது தரிசனத்துக்குப் பிறகே நடை சாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் கருவறையில் தரிசனம் செய்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது; இதனால் விவகாரம் கவனம் பெற்றது.

கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு, அமைச்சர் திருப்பரங்குன்றம் சென்றபோது என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறை செயலருக்கு உத்தரவிட்டது.