எபோலா வைரஸ் பரவல் நிலவரத்தை முன்னிட்டு, மே 28 முதல் 31 வரை புதுடில்லியில் நடைபெற திட்டமிடப்பட்ட இந்தியா–ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது உச்சி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா–ஆப்ரிக்கா கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் கீழ் 2008, 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் உச்சி மாநாடுகள் நடைபெற்றன.

11 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் நடைபெற இருந்த இந்த மாநாட்டில், வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில் காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா பரவல் தீவிரமடைந்துள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பு இதை சர்வதேச அளவிலான பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாநாடு நடத்துவது தொடர்பாக ஆப்ரிக்க யூனியன் தலைவர் மற்றும் ஆப்ரிக்க யூனியன் கமிஷனுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் மாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.