பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சூரிய மற்றும் காற்றாலை எரிசக்தி திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக நடிகர் கமல் ஹாசன் பாராட்டியுள்ளார்.

வீடியோ செய்தியில் பேசிய அவர், ஈரான் போர் தாக்கம் குறித்து ஒரு இந்தியனாக கவலையுடன் பேசுவதாக கூறினார். எண்ணெய் விலை உயர்வு மற்றும் கடல் வர்த்தக பாதைகள் முடக்கம் காரணமாக சமையலறை, வீடுகளுக்கான எரிசக்தி, விவசாயத்திற்கு தேவையான உரங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் ஆகியவற்றின் செலவுகள் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல நாடுகள் எரிபொருள் சேமிப்பு தொடர்பான விதிகளை அமல்படுத்தியுள்ளதாகவும், இந்தியாவும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது எனவும் அவர் கூறினார். இத்தகைய சூழலில் கட்சி அரசியலைத் தாண்டி தேசியப் பொறுப்பு மேலோங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், கடந்த கால நெருக்கடிகளில் மக்கள் பங்களித்த நிகழ்வுகளை நினைவூட்டினார்; ஆனால் இன்று இந்தியா அத்தகைய தியாகத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், மக்கள் சிறிய அளவிலாவது எரிசக்தி சேமிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நிலக்கரி-எரிவாயு மாற்றம், புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு எரிசக்தி துறைகளில் சமீபத்திய முதலீடுகள் தன்னை ஊக்கப்படுத்துகின்றன என்றும் கூறினார். தியாகம் மக்களிடமிருந்து மட்டும் எதிர்பார்க்கப்படக் கூடாது; அரசுகளும் பங்கு வகிக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் அனைத்து முதலமைச்சர்களுடனும் தேசிய உச்சி மாநாடு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

உடனடியாக இரண்டு நடவடிக்கைகள் தேவை என அவர் கூறினார்: பெட்ரோல், டீசலில் உள்ள VAT உள்ளிட்ட மாநில வரிகளை குறைக்க வேண்டும்; ரயில், மெட்ரோ, பஸ் கட்டணங்களை குறைக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் தனியார் வாகனங்களை விடுத்து பொதுப் போக்குவரத்துக்கு மாற முடியும் என்றும், இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு அலகு எரிசக்தியும் நாளை நாட்டை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.