கோவையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு படைக்கு, தனித்துவத்தை காட்டும் லோகோ உடன் புதிய சீருடை அறிமுகப்படுத்த திட்டமிடப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சிறப்பு படை அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாடுகளை தொடங்கியிருந்தாலும், அதிகாரப்பூர்வ துவக்க விழாவுக்குப் பிறகு வெளியிடப்படும் வழிகாட்டுதல்கள் வந்ததும் முழுமையாக களத்தில் செயல்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாநகரில் இரண்டு குழுக்கள் மற்றும் கோவை ரூரல் பகுதியில் ஒரு குழு என மொத்தம் மூன்று குழுக்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சிறப்பு படையின் பணிவிவரங்கள், செயல்முறை வழிகாட்டுதல்கள், தனி ஸ்டேஷன் அமைக்கப்படுமா போன்ற விஷயங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் வெளியான பிறகு முழு தகவல்கள் வழங்கப்படும் என்றும், இதற்கான பிரத்யேக லோகோ மற்றும் சீருடை அறிமுகம் குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.





