சென்னை: சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்படாத தகவல்கள் பரவுவதால், போலி கல்வி தொடர்பான சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் குழுக்களை தீவிரமாக கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறைகளின் லோகோவை பயன்படுத்தி செயல்படும் சில கணக்குகள், “எளிய விடைகள்”, “தேர்வில் வரும் வினாக்கள்” போன்ற தகவல்களை பரப்பி மாணவர்களை திசைதிருப்புவதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு, தேர்வு, போட்டித் தேர்வு மற்றும் வேலைத் தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், “கல்வி ஆலோசகர்” என்ற பெயரில் கருத்து கூறும் சிலர், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை தவறான வழிக்கு திசைதிருப்பி பணம் பறிப்பதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் டெலிகிராம் உள்ளிட்ட தளங்களில் குழுக்களை நடத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய குழுக்கள் வினாத்தாள் கசிவு போன்ற தவறான தகவல்களை பரப்பி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பீதி, பதற்றம் உருவாக்கும் நிலையில், அவற்றை கவனமாக கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வதந்திகள் பரவும் போதே தலையிட்டு சரியான தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.





