ஜூன் 21ல் நடைபெற உள்ள நீட் மறுதேர்வை “100 சதவீதம்” தவறில்லாமல் நடத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மே 3ம் தேதி நாடு முழுவதும் நடந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தேசிய தேர்வு முகமை (NTA) ஜூன் 21ல் மறுதேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

டில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதான், சர்ச்சைக்குப் பிறகு தேர்வு நடைமுறையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க மத்திய அரசு முயற்சிகளை தீவிரப்படுத்தி வருவதாக கூறினார்.

மே 3 தேர்வில் முறைகேடு கண்டறியப்பட்டதால் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருந்ததாகவும், தேர்வு “மாபியாக்கள்” நடத்தும் மோசடிகளால் தகுதியுள்ள எந்த மாணவரும் தன் உரிமையான வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த சர்ச்சையால் சுமார் 22 லட்சம் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த நிலையைப் புரிந்துகொண்டு பொறுப்பேற்று கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.