புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதல், பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட சதி திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் மதத்தை கேட்டு பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1,597 பக்கங்களை கொண்ட என்ஐஏ குற்றப்பத்திரிகையில், சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் (TRF) தலைவர் ஹபிபுல்லா மாலிக் ஆகியோர் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டதாக கூறப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சுலைமானி ஷா (பைசல் ஜாட்), ஜிப்ரன் (ஹபீப் தாஹிர்) மற்றும் ஹம்சா ஆப்கானி ஆகிய மூவரையும் பாதுகாப்புப் படையினர் ஜூலை 29 அன்று சுட்டுக் கொன்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை தகவலின்படி, தாக்குதலாளர்கள் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்ததாகவும், அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பஷீர் அஹமது உதவி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்கள் பஞ்சாபி கலந்த உருது மொழியில் பேசியதாகவும், அங்கேயே தங்களது உடைமைகளை வைத்ததாகவும், மறுநாள் ரொட்டி தயாரித்ததாகவும் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.
தாக்குதல் நடத்துவதற்கு முன் அவர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து உணவருந்தியதாகவும், பையில் இருந்த போர்வையை பயன்படுத்தி அடையாளத்தை மறைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் இருவர் சிற்றோடை அருகே மறைந்து கண்காணித்ததாகவும், உடைமைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பூங்காவிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. தப்பிச் செல்லும் போது ஒரு இடத்தில் மறைந்து வந்தவர்களையும் சுட்டதாகவும், வழியில் ஒருவரை நிறுத்தி முஸ்லிம் நடைமுறை குறித்து கேட்டபோது அவர் பதிலளித்ததால் அவரை விட்டுச் சென்றதாகவும், பூங்காவிலிருந்து வெளியேறும் போது திட்டம் வெற்றி பெற்றதாக கருதி வானில் துப்பாக்கிச் சூடு செய்து கொண்டாடியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





