2011-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர், அந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் ஸ்டாலின் வெற்றி பெற்றதாகவும், தேர்தல் பணிகளில் அரசு இயந்திரங்களை தன் சாதகமாக பயன்படுத்தியதாகவும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மீண்டும் தீவிரமாக விசாரணைக்கு வந்தது. துரைசாமி தரப்பில் குற்றச்சாட்டுகள் விரிவாக முன்வைக்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் தரப்பில் அவற்றை மறுத்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஸ்னோய் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 19-ம் தேதி இறுதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், இருவரும் வழக்கிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்து, இது தொடர்பான இரு பக்கங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளனர்.
அந்த உத்தரவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு வேறு புதிய அமர்வில் மீண்டும் பட்டியலிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விலகலுக்கான காரணங்களை நீதிபதிகள் தெரிவிக்கவில்லை. நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி வரும் ஜூன் 28-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.





