தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்கான முக்கிய வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும், அதை தவற விடக்கூடாதெனவும் கட்சியின் மேலிடத் தலைமையிடம் தமிழக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஹிந்துக்கள் ஓட்டுகளை ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷிடம் முன்வைக்கப்பட்டது.
சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஊட்டியில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில், தோல்வியிலிருந்து மீண்டு அமைப்பு வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த மாதந்தோறும் மாநில நிர்வாகிகள் கூட்டம் மற்றும் ‘பூத்’ கமிட்டி கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதை கண்காணிக்க பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக கோவையில் மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், சந்தோஷ் தலைமையில் மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதகார் ரெட்டி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சி வட்டாரங்கள் கூறுகையில், கூட்டத்தில் பல நிர்வாகிகள் தேர்தல் தோல்வி குறித்து பேசினர்; சிலர் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். மேலும், தி.மு.க. எடுத்திருந்த நிலைப்பாட்டைப் போலவே தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) அரசும் செயல்படுகிறது என சிலர் குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து த.வெ.க. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டலாம்; ஆனால் தனிநபர் விமர்சனங்கள் வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் நலத் திட்டங்களை தெருமுனை கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என சந்தோஷ் கேட்டுக்கொண்டதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சி பணிகளை வேகப்படுத்தி மேலிடத் தலைவர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சில மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.





